ஆன்லைனில் புத்தகம் வாங்க

Tuesday 17 December 2013

போட்டிச் சிறுகதை-24


சிறுகதை- சிறுகதையாய் ஒரு தொடர்கதை..!!


சொந்தங்களை தூரம் வைத்து கடலோர நகரத்தின் கடைவாயில் பொதுமிய நாட்களை நகர்த்திய காலம் அது.  எனை ஒத்த சாயலில், மனதின் நிறமும், நிகழ்வின் குணமும் அச்சுப் பிசகாமல் ஒட்டிக் கொண்ட கொங்குத் தோழன் அவன்.  அவன் முகம் மட்டும் அல்ல, குணமும் யதார்த்தத்தின் அவதானிப்புதான்.  மொட்டவிழ் நட்பொன்றும் அல்ல இது. இருந்தும், என் மூக்குக் கண்ணாடியை மறந்து, அவன் விரல் கோர்த்து திரிந்த சாலைகளின் நீளலில் பிரசங்கமானது அவன் காதல் கதை.
      
     பெற்றோரை மறந்து எங்கள் ஒத்திகையில் அரங்கேறிற்று அந்தத் திருமணம்.  முன் அறிவிப்பில்லா வானிலை மாற்றம் போல் காலச் சீர்திருத்தத்தில் திக்கு தேடிக்கொண்டோம்.  சாதனை என்று எண்ணிக் கொண்டிருந்த திருமணத்தின் சான்றாய், எட்டுத் திங்கள் வளைகாப்பு எங்கள் சந்திப்புக்கு வாய்ப்பு ஈந்தது.          காலம் பிந்திய தோழனை, காத தூரம் கடந்து காண வந்தேன். 

     அந்த அதிகாலையில் எனக்காக காத்து நின்றவனின் புன்னகை அச்சும் பிசுறவில்லை.  எதிர்பார்ப்பு இல்லா நட்பு ஒன்றை அவன் முகத்தில் என்றுமே காண தவறியதில்லை.  தமிழின் அழகாம் முருகன் குடிகொண்ட சென்னிமலை கிராமம் அது.  பேருந்து நிலையத்திற்கும், வீட்டிற்குமான தூரத்தை பால்யத்தில் கடந்தோம். தந்தையாக சித்தம் கொண்ட  தருணங்களை அவன் கண்களில் கண்டேன்.  விழி எட்டும் தூரத்தில் எங்களை கவனித்துக் கொண்டவராய் வரவேற்றார் அவன் தந்தை. 

     தந்தை மகனுக்கான உறவை நட்பில் உருவகித்தவர் அவர் – எனக்கும் தோழனாய்.  இரு கேள்விக்குறிகள் ஒன்றுக்கொன்று சிக்கிக்கொண்ட அவர் பார்வையலைகள் எனை அந்த திருமண நாட்களுக்கு அருகில் கொண்டு சென்றது.  பதில்கள் இல்லா கேள்விக்கு சொந்தக்காரர் அவர்.  நட்பின்  இலக்கணம் பிறழா தந்தையும் அவர்தான். “சின்ன புள்ளைங்க வெள்ளாமை வீடு வந்து சேராது” ” என்ற அவர் சப்பை சத்தம் இன்றும் என் செவிகளை நனைக்கும். 

     நனைத்தவரை வணங்கிக்கொண்டு வீட்டின் உள் செல்ல வஞ்சம் இல்லா நேசம் செய்யும் அன்னையும், அக்காவும் என்னை வழக்கமான வார்த்தைகளில் வரவேற்றார்கள். தந்தை ஓர் தட்டின் எடை என்றால், எடை முள்ளின் சலனம் நீக்கும் தாய் அவள். அவன் அம்மாவை நினைக்கும் போதெல்லாம் கொஞ்சமாய் சாந்தேறிய தலைமுடியும், இரட்டை மூக்குத்தியும், வெற்றிலைப் பொதுமல் புன்னகையும் தான் முந்திகொள்ளும்.  நகரத்தின் நாட்காட்டிகளில் உடன் தங்கி சமைத்துப் போட்டிருக்கிறாள் எங்களுக்கு. 

      தாய்ப்போல் ஒரு சொந்தம் அவன் அக்கா.  என் முக சாயலை பிரதிபலிக்கும் உறவு அவள் – அக்கா என்று சொல்லி கொள்ள.  என் உடன்பிறவா ஏக்கத்திற்கு இவளும் சொந்தக்காரிதான்.  ஆறவிட்ட சிலிர்ப்பின் பின்பகுதியில் சம்பிரதாய சிரிப்புடன் அறிமுகம், ஆனால் என் நண்பனின் மனைவி, தாய்மையின் சுரம் ஏற்று, தன் வீட்டு சொந்தங்களுக்கான அவள் காத்திருப்பு அவள் புன்னகையில் தெரிந்தது. சில நேரங்களுக்குள் பெண் வீட்டாரும் வந்தாகிவிட்டது. நாடு தாண்டிய காதல் திருமணம் என்பது அந்த சொந்தங்களின் வருகையால் ஊர்ஜிதம் ஆனது.     

     காலை சிற்றுண்டிக்கு பின் வளைகாப்பு நிகழ்வு ஆரம்பமாகி இருந்தது.  நானும் நண்பனும் பழங்கதை பேசிகொண்டிருந்த பொழுதே, அவனுக்கான தொலைபேசி அழைப்பிற்கு செவி மடுத்தான்.  பின்புதான் தெரிந்தது அவன் மனைவியின் தோழியை பேருந்து நிலையத்தில் இருந்து நான் அழைத்து வர வேண்டும் என்று. இருசக்கர வாகனத்தின் சாவியை என் கையில் வைத்து அழுத்தியவனிடம், தயங்கினாலும் வேறு வழி இன்றி ஒத்துக்கொண்டேன்.  அந்தப் பெண்ணிற்காக பேருந்து நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தேன். பெயர் தெரியா அந்தத் தோழியை முன்பொருமுறை சந்தித்து இருக்கிறேன், என் நண்பனும் அவன் மனைவியும் காதல் செய்துகொண்டிருந்த காலங்களில். 

     ஓயாது அலையும் கண்களுக்கும், துறுதுறு பேச்சிற்கும் சொந்தக்காரி அவள்.  அந்த நாட்களில்  ஒரு சிறுதூரப் பேருந்து பயணத்தில் இருக்கைகள் இல்லா காரணத்தால் நின்றுகொண்டு பயணித்தேன். அந்த தோழியின் அருகாமை இருக்கைக்கு எனை அழைத்தவளிடம், அடம் பிடித்த குழந்தை போல, யாவரும் இருந்து வர நான் மட்டும் தனித்து பயணித்தவனாய், என்னை கேலி செய்துகொண்டு வந்தாள்.  பேரூந்து நிலையத்தில் தூரத்தில் எனை பார்த்ததும் அடையாளம் கண்டுக்கொண்டவளாய் அவள். முதற் சந்திப்பும் பழகியதாய் பகிர்ந்து கொள்ளும் தோரணை கொங்கு தேசத்திற்கே உரியது.   
  
     இருசக்கர வாகனத்தில் உடன் எறிக்கொண்டதும், கடந்த நியாபகங்களை நினைவு கூர்ந்தவளாய் அவள் சிரிப்பு. அந்த நினைவுகளை காட்டிக் கொள்ளாமல் நானும் அலட்டிக்கொண்டேன். மௌனமாய் பயணித்தது அந்த சிறு தூரம்.  அன்றைய நாளின் நிகழ்வுகள் யாவும் இனிதாய் அரங்கேறியது.  நிகழ்வது சுகம் தான் என்றாலும், நிபந்தனை இல்லா காதல் திருமணத்தின் கசப்பு, காலம் தாண்டியும் யாவரின் கண்களிலும் படிந்துதான் கிடந்தது. 
   
         நண்பனையும் அவன் மனைவியையும் பார்த்தபோது, இதே சென்னிமலையின் ஒரு தெருவோர கோவிலில் மஞ்சள் கயிரோடு மணக்கோலத்தின் காட்சிதான் என்னை மென்று முழுங்கியது. அன்று ஏனோ என் உடல் பதறி சில கண்ணீர் துளிகளும் ஏன் வந்ததென்றே இன்றும் புரியவில்லை.  அன்று முகம் அறியா உறவுகள் யாவும் இந்த தம்பதிகளை வாழ்த்திச் சென்றது.  வளை அணி நிகழ்விற்கு பின் விரும்பிய அழைத்தமையால் அவன் மனைவியை பெண் வீட்டாருடன் சென்று விட்டுவிட்டு, ஊர் திரும்பலாம் என்று நானும் நண்பனும் முடிவு செய்தோம். 

     நகரத்தில் இருந்தது அவர்கள் வீடு. அவள் தந்தை இந்த நிகழ்விற்கு வராததை அங்கு சென்ற பின்பு தான் உணர்ந்தேன். வழக்கமாய் நடமாட்டம் இல்லா, படுக்கையிலே இருந்தவர் நண்பனுடன் என்னையும் அழைத்து பேசிக் கொண்டிருந்தார். அந்த காதல் திருமணத்தின் முதல் தடையாய் நின்ற கம்பீரம், இன்று அவர் குழந்தை பேச்சில் இல்லை. காலம் ஒரு மனிதனை தன் இசைவிற்கு ஆட்டி வைக்கிறது.

     அன்று காவல் நிலையத்தில் அவர் தன் மகளை அடித்த காட்சி இன்றும் பிசுபிசுகிறது.  அவர் கண்களில் நான் கண்ட கோபத்தின் வீரியம் யாவும் இன்று முழுவதும் வடிந்திருந்தது.  உரையாடலின் ஒரு தடத்தில் குரல் தழுதழுத்த அவர் பேச்சு என் நண்பனை அவர் மகனாய் ஏற்கச் செய்திருந்ததை ஊர்ஜிதம் செய்தது.  அன்று இரவு உணவை முடித்துக்கொண்டு நானும் நண்பனும் கோவையில் இருந்து திருச்சி நோக்கி பயணிக்களானோம்.
 
     வெகு நேர காத்திருப்பிற்கு பின் இருக்கைகள் வழிந்து நிரம்பிய அந்த பேருந்தில் ஏறிக்கொண்டோம். மங்கிய பல வண்ண ஒளியும், மிஞ்சி ஒழுகும் பாடல்வரிகளுமாய் பிரயாணித்தது அந்தப் பேருந்து.  இருக்கைகள் இடம் தரா பயணங்கள் சில முடியா நினைவுகளை என்னுள் நிரப்ப மறந்ததில்லை, அன்றும் அப்படித்தான்.  மூன்று இருக்கைகள் கொண்ட அடுக்கில் ஓரிடம் இருந்த காரணத்தால் அந்த நிகழ்வின் புனைதலை நுகர்தலானேன்.  முகம் கூட முழுதாய் அறியா மங்கும் ஒளியில் இன்றும் என் நினைவுகளில் பயணிக்கும் மங்கை அவள். 

     ஆம் மாயக்கண்ணாடி என்ற ஒன்று காலம் தொட்டு வார்த்தைகளின் வழக்காய் இருந்து வருகிறது. அந்த மாயக்கண்ணாடி உருவங்களை மட்டும் அல்ல, உறவுகளையும் அதன் உணர்வுகளையும் கூட நிறம் மாற்றிக் காட்டுகிறது சில நேரங்களில். அழகின் வர்ணனைக்கு சிறிதும் குறைவில்லா முகம்தான். இருபத்திநான்கு வயது என்பது காணும் மாதின் விழியாவும் கரை சேர்க்கும் வலை தான். அப்படிதான் அறிமுகம் ஆனது அந்த விழியும். சலனம் தட்டா அந்த சிரிப்பு எனை புரட்டா அந்த கணம் வரையில்.
  
“ தோளில் சாய்ந்து கதைகள் பேசி !
  தூர நிலவை விரல் தொட்டு !
  கரம் கோர்த்து நடைப் பயிலும் முதற்தோழன் என் தந்தை அன்றோ ” !!
      
     அன்று தான் முதற்தோழனை அடையாளம் கண்டுகொண்டேன். அவள் சன்னல் வழியே தன் விரல்களை நீட்டி, கண்ணில் தெரியா ஒன்றை கதையாய் தன் தந்தைக்கு சொல்லிக்கொண்டு வந்தாள். உறவுகளின் நுகர்தலில், வீரியத்தின் உச்சமாய் அந்த பெண்ணின் அழகை அவள் தந்தையின் விழிகளால் ரசிக்கலானேன். மங்கை என்ற எல்லை மீறி, அவள் தந்தை என்ற இருக்கைக்குள் பிரவேசிக்கலானேன். ஏன் இந்த நிற மாற்றம். 

“ மகளாய் ஒரு மகளை முதலாய் ரசிகலானேன் ”,

     எப்படி வந்தது இந்த தைரியம், இன்று காலை முதல் எனைக் கடந்த நிகழ்வுகள் எனக்குள் இதை ஊற்றி இருக்கலாமோ.  இந்த இரண்டு நிமிட நிகழ்வு, தந்தைக்கான அகராதியியல் இருந்து பாடம் படித்துக் கொண்டது இன்று.  தந்தையாக ஆசை கொண்டேன் என்று கொச்சைப் பேச்சிற்கு என் வார்த்தைகள் தடுமாறுகின்றன.  எந்த மாதிரியான உணர்விது என்றென்ன மனம் மௌனத்தில் தான் மூழ்கிப்போகிறது.  இருந்தும் காலம் மீறி எல்லை தொட்டு வந்த சிறு தித்திப்பும், கொஞ்சம் திகைப்பும் ஒரு சேர எனை சூழ்கிறது.


     ஒரு நாளில் எத்தனை எத்தனை உறவுகளும், நிகழ்வுகளும் நமைக்கடந்து போகின்றன.  காரணம் இன்றி காரியம் இல்லை. !!   அதிகாலை நேரம் திருச்சி வந்தாகி இருந்தது. நண்பனை வழி அனுப்பிவிட்டு, ஊர் செல்லும் பேருந்தில் அமர்ந்தபடி இந்த நிகழ்கால நினைவுகளை அசைபோட்டுக்கொண்டேன் ஒரு முறை..!!