ஆன்லைனில் புத்தகம் வாங்க

Friday 20 December 2013

போட்டிச் சிறுகதை-31

சிறுகதை-அரும்புமீசை கனவுகள்

எல்லாமே மாறியிருந்தது. எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால் மனதை இத்தனையளவு நெருடும் என எதிர்பார்க்கவில்லை. ஊரைவிட்டு எங்கேயோ பிழைக்கப்போனவர்கள்.. இது என் வீடு, நான் விளையாடிய முற்றம், காய் பறித்த மரம், கால் பதித்த தடம் என அசைபோடும் எத்தனையோ நினைவுகளை கண்முன் காண பல வருடங்கள் கழித்து திரும்பிவரும்போது காலஓட்டத்தில் அந்த காட்சிகள் எல்லாம் வேற்றுருபெற்று இருப்பதை அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ளமுடியாதுதான்.

அதையும் சகித்துக்கொள்ளும் அளவு கண்ணனின் கண்களில் வேறு ஒரு தேடல், பட்டாம்பூச்சியாய் சுற்றிதிரிந்த பள்ளிபருவத்தில் அவன் மனதில் விதைபோட்ட ஒரு எண்ணம்.. ஆலமரம் ஆகாமல் மண்ணுக்குள்ளேயே வேறூன்றியிருந்தது. பணம் சம்பாதிப்பதற்காக படிக்கவேண்டும் என்ற நோக்கில் மேல்நாட்டிற்கு சென்று இத்தனை காலம் கழித்து அந்த விதை முளையாய் மெல்ல எட்டிப்பார்த்ததால் இந்த மறுபிரவேசம். கல்வியும் கண்ணுமாய் கழித்த பாடசாலை வாழ்க்கையில் பருவமாற்றத்தால் வந்த கிளர்ச்சி. கல்விமீது ஒரு கண் இருந்தாலும் எதிர்பாலார் ஒருவர்மீது மற்றொரு கண்ணைவைக்கும் எண்ணக்கோளாறு. இது சரியா தவறா என புரியாத குழப்பம். கரைதெரியாமல் தவிக்கும் கட்டிளமைப்பருவம். மீசை அரும்பும்போதே மனதில் ஆசை அரும்பும் அத்தியாயம். போதாக்குறைக்கு பாடசாலையில் புதிதாய் வந்து சேர்ந்த மாலா மிஸ்.

எல்லாப்பாடங்களிலும் முதல் மதிப்பெண் எடுக்கும் கண்ணனை ஆசிரியர்கள் முன்னுக்கு அழைத்து  பாராட்டும்போது பெருமையாக இருக்கும். ஆனால் மாலா மிஸ் பாராட்டும்போது மட்டும் பூரிப்பாக இருக்கும். அவருடைய பார்வையில் பட்டாலேபோதும் என மிளிரிய கண்கள்மாலா மிஸ் விடுப்பு எடுத்த தினங்களில் குமுறிய நெஞ்சம். இன்றாவது தனக்கு பிடித்த இளமஞ்சள் சேலையில் வரமாட்டாரா என ஏங்கிய முதல்பாடவேளைகள். கண்திறந்திருக்கும்போதே காட்சிகளாய் வந்து போன கானல்களை எண்ணி கண் கலங்கினான். மணலில் தொலைந்துபோன கால்தடங்களை  தார் ரோட்டில் தேடி பயணப்பாட்டான்.

அது ஒரு பிழைத்துப்போன கனவு. உயிர் பிழைக்காத கனவு. எப்பொழுது மனதில் ஆணியடித்தது என்று ஞாபகம் இல்லை. எப்பொழுது வந்தது என்றா முக்கியம்? எவ்வளவுதூரம் உள்ளே நுழைந்தது என்பதுதானே தேவை. எத்தனையோ பெண்களின் நட்பைக் கடந்தும் முதன் முதலில் உள்ளக்கிடங்கை கொள்ளையடித்த தேவதை. பேசும் பரவசத்தில் ஈர்ப்பை திருடியவள். இன்னும் எத்தனையோ முறைகளில் என்னை கவிஞனாக்கியவள். முதல் கனவு தந்தவள். வாழ்நாளில் ஒருமுறையேனும் மீண்டும் பார்க்கமாட்டோமா என ஏங்கவைத்தவள். அவளுக்காகவே இந்த பயணம்.

காலம் எவ்வளவு மாறினாலும் ஏழைகளின் வாசஸ்தலம் ஓலைக்குடிசைதானோ..  ஆனால் இவைகள் புதிதாக வேயப்பட்ட குடிசைகள் அது ஒன்றுதான் வித்தியாசம். குழாயடி நீரும் வேப்பமர நிழலில் வெக்காளியம்மன் கோயிலும் அப்படியே இருந்தன. பழகிய முகங்கள் எதுவுமே கண்களுக்கு சிக்கவில்லை. இருபது வருடம் ஆகியிருக்குமல்லவா? பாடசாலைக்கு செல்லும் வழியும் ஞாபகம் இல்லை. திரும்ப திரும்ப ஒரே வீதியில் சுழல்வதுபோலவே இருந்தது. இந்த வெயிலுக்குதான் எத்தனை தாகம் பாருங்கள். உடலிலுள்ள நீர் எல்லாம் இப்படி வேர்வையாக உறிஞ்சிவிட்டதே. வேறுவழியில்லாமல் எதிர்பட்ட ஒருவரிடம் பாடசாலை பற்றி விவரம் கேட்க அப்படி ஒரு பாடசாலை இருந்ததாகவே அவருக்கு தெரியவில்லை. வீண் வேலையோ? ஒரு உத்வேகத்தில் வந்து இல்லாததை தேடிக்கொண்டிருக்கிறோமோ? பாடசாலை இடிந்திருக்குமோ? அதுவும் இல்லாவிட்டால் மாலா மிஸ்... எங்கே விசாரிப்பது? அவன் பின்வாங்கிவிட முடிவுசெய்தான்.

கையில் அலுமினிய கோப்பையுடன் பழைய கந்தையுடன் அலங்கோலமாக அந்த கிழவியைப் பார்க்க பரிதாபப்பட்டு பிச்சைபோட போனவன் ஸ்தம்பித்து நின்றுவிட்டான். இப்படி ஒரு கோலத்திலா பார்க்கவேண்டும்.. பிச்சைக்காரியாக? போய் பேசலாமா? ஞாபகம் இருக்குமா? எத்தனை கம்பீரமாகபாடசாலையை வலம் வருவாள். இப்படி கூனிப்போய் கோயில் வாசலில்? தான் மனதில் தேவதையாக உருவகித்த ஒரு பெண்ணை பிச்சைகாரியாகப்பார்தால் ஒருவனுக்கு எப்படி இருக்கும். அடையாளமே தெரியவில்லை. தான் மட்டும் எப்படி கண்டுபிடித்தேன் என்று வியந்தான்.

'டீச்சர்?'

அந்த சொல் அவளை நகைப்பூட்டியிருக்கவேண்டும். ஏளனமாகப் பார்த்தாள்.

'நான் உங்ககிட்ட படிச்ச மாணவன். கண்ணன். ஞாபகம் இருக்கா டீச்சர்? என்ன டீச்சர் இப்படி இருக்கீங்க? உங்களுக்கேன் இந்த நிலைமை? செல்லுங்க?'

அவனுடைய கேள்விகளுக்கு அர்த்தமற்ற பார்வை ஒன்றையே பதிலாய் தந்தாள். அவள் ஒன்றுமே சொல்லாமல் அவன் எப்படி தொடருவான்
குழப்பதில் கண்ணீரை துடைத்துகொண்டிருந்தவனை 'என்னப்பா அந்தம்மாவோட பேச்சு?' ஒரு குரல் திருப்பியது.

'இவங்க என்னோட டீச்சர்... ரொம்பநாள் கழிச்சு பாக்குறேன்! இவங்க ஏன் இப்பிடி இருக்காங்க, இவங்களுக்கு என்ன ஆச்சு?'

'அட போப்பா! ராணி மாதிரி வாழ்ந்த பொம்பள, பொண்டாட்டி பேச்சைக்கேட்டு பெத்த புள்ளயே தொரத்திவிட்டான். அதுல இருந்த இப்பிடித்தான்.யார்கூடயும் பேசாது. யாராவது சோறுபோட்டா தின்னும். ஜடம் மாதிரி இருக்கு. சும்மா இதுகூட பேசி நேரத்த வீணாக்காம இடத்த காலி பண்ணு'

பெரியவர் கூறிவிட்டு போன வார்த்தைகளால் திகைத்த அவன் அவளது முகத்தைப் பார்த்தான்.

'நீங்க ஏன் டீச்சர் இப்பிடி இருக்கணும்? எப்பிடி வாழ்ந்தவங்க நீங்க.. நான் உங்கள பார்த்துக்குறேன்.... என்... அம்மா மாதிரி...!'

 அவள் நிமிர்ந்து பார்த்தாள்.

'என்கூட வாங்க டீச்சர்.. சுயமரியாதையோட சாப்பிட்றதுக்கும் பாதுகாப்பா வாழுறதுக்கும் நான் வழி காட்டுறேன்'


ஆச்சரியத்தோடு அவனைப் பார்த்து அவள் வடித்த கண்ணீர் நன்றியுணர்ச்சியின் உச்சம். முடிந்துவிட்ட வாழ்க்கையிலும் ஏதோ ஒன்றை தேடிக்கொண்டிருக்கும் ஆவல் அவள் கண்களில் தெரிந்தது. அவள்மேல் தனக்கிருந்த பாசத்திற்கான வடிகாலாக இந்த சந்தர்ப்பத்தை எடுத்து ஒரு புதியவழியை அவளுக்காக உருவாக்கினான். உயிர் அளிக்கும் பெற்றோர்களை நினைப்பதுபோல உலகை உணர்த்தும் ஆசிரியர்களையும் நினைக்கவேண்டும். தள்ளாத வயதில் தாயை தள்ளிவைத்தான் அந்த மகன். ஆனால் முடியும் தருவாயில் முடியாமல் தவிக்கும் முதுமையின் வலியுணர்ந்து ஆதரவு கொடுத்தான் இந்த மாணவன். நோய்நொடியில்லாமல் பாதுகாத்த பொற்றோரை வறுமை என்னும் கிருமி தொற்றி பசி என்ற தீராத நோய்க்கு ஆளாக்கி தாங்கள் மட்டும் சுகபோகம் அனுபவிக்கும் பிள்ளைகளை அருவறுப்போடு நினைத்துப்பார்த்தான்.