சிறுகதை-பாதை
சாவியை போடும் முன் ஸ்டேண்டை எடுக்க
வேண்டும். இதை ஒரு பழக்கமாகக் கொள்வது நல்லது. ஹெல்மெட் தேவையில்லை. உங்களது அப்பா ஒரு விபத்தில் அவர் அணிந்திருந்த ஹெல்மெட் வார்
கழுத்தறுத்து தான் இறந்தார் என்பதை நினைவில் கொள்க. மெல்ல ஏறி
அமருங்கள் சைக்கிளைப் போல் தான் இதுவும் சைக்கிளைப் போல் மாங்கு மாங்கு என்று
மிதிக்கத் தேவையில்லை அதனாலேயே இது பயில்வதற்கு கொஞ்சம் கடினமானது. உங்கள்
கட்டுப்பாட்டிற்க்குள் எளிதில் வராதது. .உங்கள் வலது கட்டை விரலுக்கு கீழே இருக்கும் ஸ்டார்ட்டரை அழுத்தினாலே
வண்டி ஸ்டார்ட் ஆகிவிடும் என்றாலும் உங்கள் காலுக்கு இடையில் இருக்கும் கிக்கரை
மிதியுங்கள். “டுப்” வண்டி
கியரில் இருந்தால் இப்படித் தான் தூக்கிப் போடும். கியரை குறையுங்கள் உங்கள்
டிஸ்ப்ளேவில் N என்கிற எழுத்து ஒளிரும் வரையில்
குறையுங்கள். இப்போது மிதியுங்கள் டர்ர்.. இன்னொரு முறை மிதியுங்கள் டர்ர்... இரவின் பனியால்
ஸ்டார்ட் ஆவதில் பிரச்சனை இருக்கலாம். இன்னும் ஒரு முறை மிதியுங்கள் டப டப டப
டப.... இப்போது உங்களது ஆக்சிலேட்டரை முருக்குங்கள். “விர்ரூம் விர்ரூம்” இன்னும்
கொஞ்சம் முருக்கிக் கொள்ளுங்கள் “விர்ரூம் விர்ரூம்” இது உங்களுக்குள் சொல்ல முடியாத ஒரு உணர்வைக் கொடுக்கும். வண்டி உங்களது
கட்டுப்பாட்டின் கீழ் வேலை செய்ய தயாராய் இருக்கிறது என்பதை நீங்கள் உணரும் தருணம் இது. இந்த செயல் உங்களது அதிகார
மனோபாவத்தை கொஞ்சம் திருப்தி படுத்தும். இப்போது உங்கள் இடது கை பக்கத்தில்
இருக்கும் கிளச்சை பிடித்துக் கொள்ளுங்கள். எவ்வளவு அழுத்தமாக பிடிக்கிறீர்களோ
அவ்வளவு பயம் உங்களுக்குள் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள். முதல் கியரை போடுங்கள் ஒளிரும் N எழுத்து அணைந்து விடும். இது
மிகவும் முக்கியமான கட்டம் உங்களது வண்டியை உங்களது கட்டுப்பாட்டுக்குள்
இருக்கிறது என்பதை வண்டியும் நீங்களும் நிரூபிக்க வேண்டிய கட்டம்.மெது மெதுவாக
கிளச்சை விட வேண்டும். ஒரேயடியாக விட்டால் வண்டி அணைந்து விடும். இது வண்டியின்
மேல் உங்களுக்கும் உங்கள் மேல் வண்டிக்கும் அவநம்பிக்கையை ஏற்படுத்தும். அதனால்
மிக மெதுவாக கிளச்சை விட வேண்டும் அதே சமயம் மிக மெதுவாக உங்களது ஆக்ஸிலேட்டரை
முறுக்க வேண்டும் இரண்டும் ஒரே செயல் போல் ஒத்திசைவோடு அமைந்திருக்க வேண்டும்.
இப்போது வண்டி மெல்ல நகரும் உங்களது கால்களை பூமியில் இருந்து எடுத்து வண்டியின்
மீது வைத்துக் கொள்ளுங்கள். இப்போது உங்களது கால்கள் கரிய உருண்ட சக்கரங்களாக
மாறிப் போயிருக்கும். நீங்கள் முழுமையாக கிளச்சை விட்ட பின் வண்டி சீராக ஓட
ஆரம்பிக்கும். உங்கள் ஸ்பீடோமீட்டர் பத்தை தாண்டும் போது உங்களது வண்டி கொஞ்சம்
உறுமும் உடனே மீண்டும் கிளச்சை பிடித்து இரண்டாவது கீரை போடவும் ஏற்கனவே உங்கள்
வண்டிக்கு நீங்கள் நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டதால் கிளச்சை வேகமாகவே விடலாம்.
இப்போது நீங்கள் வண்டியின் இரண்டாவது கியரில் போய் கொண்டிருக்கிறீர்கள். உங்களது
வண்டியின் ஸ்பீடோமீட்டர் இருபது என்று காட்டுகிறது.இப்போது நீங்கள் உங்கள் வீட்டிலிருந்து
தேசிய நெடுஞ்சாலைக்கு வந்துவிட்டீர்கள். உங்களது ஸ்பீடோ மீட்டரில் பச்சை நிறத்தில்
குறிக்கப்பட்டிருக்கும் 30 – 50 கிமீ வேகத்தில் போனால் உங்களது
பெட்ரோல் மிச்சமாகும். அதனால் உங்களது கியரை மூன்றுக்கு மாற்றி உங்களது வேகத்தைக்
கூட்டுகிறீர்கள் 30 32 38 38 43 43
43 43 உங்களது கையை முருக்காமல்
அப்படியே போகிறீர்கள் சாலையின் ஓரத்தில் இருக்கும் போட்டால் நிலத்தையும் அதில்
இருக்கும் புதர்களையும் பார்த்துக் கொண்டே போகிறீர்கள். காற்று உங்கள் உடலைத்
தீண்டுவதை அனுபவித்துக் கொண்டே போகிறீர்கள். 45 50 56 உங்களது கால் அனிச்சையாக
நான்காவது கியரைத் தட்டுகிறது.நீங்கள் ஆக்ஸிலேட்டரை இன்னும் கொஞ்சம்
திருப்புகிறீர்கள். இனி ஸ்பீடோமீட்டரை நீங்கள் கவனிக்க வேண்டியதில்லை. அது இனி
உங்கள் வண்டியின் அங்கம் இல்லை. மூச்சு விடுவது போல் இயல்பாக ஆக்ஸிலேட்டரை
முறுக்குகிறீர்கள். இப்போது நீங்கள் வேகம் என்கிற வார்த்தையை உணர்கிறீர்கள். அது
கொடுக்கும் போதையை அனுபவிக்கிறீர்கள். ஒரு காட்டுக் குதிரையைப் போல... ஒரு
வாளிப்பான நதியை போல... இப்போது நீங்கள் வண்டியை உங்களது வாகனம் என்பதை
மறக்கிறீர்கள் மறுக்கிறீர்கள். உங்கள் கண்களில் கரிய தார்ச்சாலை ஒரு வாகனம் போல்
தெரிகிறது. நீங்கள் சாலையை ஓட்டிக் கொண்டிருப்பதாய் நினைக்கிறீர்கள். சாலையை
உங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கிறீர்கள். உங்களுக்குள் அடங்க
மறுக்கும் சாலையை ஒரு பூதத்தைப் போல் நீங்கள் விழுங்க ஆசைப்படுகிறீர்கள். நீங்கள்
விழுங்கிவிட்ட சாலையின் நீளத்தைப் பற்றிய எண்ணம் இல்லாமல் இன்னும் மிச்சம்
இருக்கும் சாலையை மட்டும் அளந்து கொண்டிருக்கிறீர்கள். வேகம்.. இன்னும் வேகம் ..
உங்கள் கண்களில் இருந்து நீர் வழிந்து ரப்பையைக் கூட தீண்டாமல் காற்றினால் இழுத்துச் செல்லப்படுகிறது. உங்களுக்கு
முராகாமியின் மேல் அனுதாபம் வருகிறது.. ஒரு அரசனைப் போன்ற மனநிலையில் நீங்கள்
சஞ்சரிக்கும் போது நீங்கள்
எதிர்பார்க்காத நாய் ஒன்று உங்கள் சாலையைக் கடக்கிறது. உங்களால் நிறுத்த
முடியாது என்று தெரிகிறது. உங்கள் வேகத்தை மிஞ்சும் வேகத்துடன் ஒரு பெரிய ராட்சச
லாரி உங்களை கடக்க முற்படுகிறது. திருப்பினால் அதன் கால்களுக்கு தங்களைத் திண்ணக்
கொடுக்கவேண்டும் என்பதை உணர்கிறீர்கள். ஒரு முடிவு எடுத்தவராய் உங்களது வண்டியை
நாய் மீது விடுகிறீர்கள். வண்டி உங்களைத் தூக்கி அடிக்கிறது. நீங்கள் அந்தரத்தில்
பறக்கும் போது தெரிகிறது இது எல்லாம் ஒரே நாளில் நடக்கவில்லை என்று, அந்த சாலை ஒரு பெரிய பூதத்தின் கரிய நாக்கு
என்று, நீங்கள் ஹெல்மெட் அணியவில்லை என்று, உங்கள்
தலையை காக்கும் பொருட்டு உங்கள் கைகளைக் கொண்டு தலையை மூடிக்கொள்கிறீர்கள்.
நீங்கள் கண்ணை இறுக மூடும் போது ரத்தத்தில் கிடக்கும் நாயை பற்றியும் அது நாயின் பாதையும் தான் என்றும் நினைக்கவே இல்லை.