சிறுகதை-நான் கதை எழுத யோசித்த பொழுதில்
எழுத
நினைக்கும் பொழுது, சொற்களுக்குள் அவர்களும், நீயும், நானும் வந்து கலந்து விடுகிறது. தவிர்க்க முடியவில்லை. மை டியர்.
சத்தியமாக
எனது எக்ஸிஸ்டன்சுக்கு காரணம் காலறா கிருமிதான் என்றால் வியப்பாகவே இருக்கிறது.
தாமிரபரணி
வெள்ளம் கரை புரண்டு ஓடி ஓய்ந்திருந்தது. ஊரைக் கொள்ளை கொள்ளையாகக் காவு எடுக்க
காலறா நோய் தலைவிரித்து ஆடுகிறது. அன்னம்மாள் இளம் வயது. அவளோடு பிறந்த நான்கு
அண்ணன்கள் அடுத்தடுத்து காலறாவில் சாகிறார்கள். இப்போழுது இவளது முறையென காலறாவால்
குடிசையில் படுத்துக் கிடக்கிறாள், தாயும் தந்தையும் இல்லாமல் உதவிக்கு யாரும் இல்லாமல் சாவை நோக்கி மெல்ல
நகர்ந்து கொண்டிருக்கிறாள். ஊரில் எந்த வீட்டில் யார் செத்தார்கள் என
கணக்கில்லாமல் செத்து மடிந்து கொண்டிருக்கிறார்கள். தொற்று நோய் அச்சத்தால் யாரும்
நெருங்க அச்சம் கொள்கிறார்கள். கும்பிட்ட சாமி கோவிலின் பிடி மண்ணை மட்டும் எடுத்துக் கொண்டு ஊரைக் காலி செய்து ஓடுகிறார்கள். மாடக்கண்ணு அன்னம்மாள் வீட்டுக்குள் நுழைகிறான். துவண்ட அவளது கைகள் மேலாடையை சரி செய்து கொள்கிறது. அவதியுறும் அன்னம்மாளை பார்க்கிறான். தொட்டுத் தூக்கி படுக்கையில் வைத்து உதவி
செய்கிறான். குடிக்கத் தண்ணீர் கொடுக்கிறான். பயப்படாத புள்ள ஒண்ணும் ஆவாது
என்கிறான் தோரணையாக. செத்துப் போகப் போகும் இளம் பெண்ணிடம் பேசும் இவன் யார் என
வெறித்த கண்களோடு பார்க்கிறாள் அன்னம்மாள். புனித அந்தோணியாரே எங்களுக்காக
வேண்டிக் கொள்ளும் என்றவாறே.
மாடக்கண்ணு
தொட்டு தூக்கிய நேரமா இல்லை அந்தோணியார் செய்த புதுமையா தெரியவில்லை, அன்னம்மாளுக்குச் சரியாகிவிடுகிறது. தொட்டுத் தூக்கியவனைத் தவிர வேறு
யாரும் இனி தன்னைத் தொடக் கூடாது என அவனையே மணம் செய்து கொள்கிறாள். மாடக்கண்ணு
கிருஸ்துவனாகிறான். மாடக்கண்ணு - அன்னம்மாள் தம்பதியினருக்கு நான்கு மகன்கள், அதில் ஒருவரது
மகனின் மகன் இந்த கதையில் வரும் ”அவன்”, ”இவன்”, ”நான்”. இவனது இன்றைய
எக்ஸிஸ்டன்சுக்கு பலரின் ஊயிரை எடுத்த காலறா கிருமியும் காரணம் என்பதை நினைக்கும்
பொழுது வியப்பாகவே இருக்கிறது.
தனது
அப்பாவின் 10 கோடி ரூபாய்
சொத்தில் தனக்கு ஒரு காசு கூட வேண்டாம் என்கிறாள் அவள். இது வரை எந்தத் தொழிலும் சரியாக அமையாத தனது சகோதரர்களுக்காக விடுதலை ஆவணத்தில் கையெழுத்திடுகிறாள், சொந்த
சகோதர்களால் தொழிலில் ஏமாற்றப்பட்டு, புதிய தொழிலில் நஷ்டப்பட்டு இருக்கும் தனது கணவரோடும் மூன்று
பிள்ளைகளோடும் வீட்டுக்கு வந்து எதுவும் பேசாமல் வெறித்த கண்களோடு எட்டாம் வகுப்பு
படித்துக் கொண்டிருக்கும் இவனைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் அவள். எனது மகன்
இருக்க எனக்கு என்ன பயம் என்றவாரே.
தாயின்
பிணத்தின் அருகில் இருக்கிறாள் அவள், அவளது தாயின் மருமகள்களால். அவளது கைப்பை சோதனையிடப்படுகிறது. தாயின்
நகைகள் ஏதாவது இவள் எடுத்திருப்பாளோ என்ற ஐயத்தில்.
பெண்ணின்
திருமணத்திற்கு அவளது உடன்பிறந்தார்கள் கூட வரவில்லையே என்ற ஏக்கத்தோடு திருமண
வீட்டு வாசலில் எல்லோரையும் சிரித்து வரவேற்றுக் கொண்டிருக்கிறாள் அவள். என்ன தவறு
செய்து விட்டாள் எனது மகள், அடுத்த சாதியில் தானாக துணை தேடியதற்கு இந்தத் தண்டனையா எனக் கண்கள்
கலங்குகின்றன. எங்கே போனது பாசமும் நேசமும் 10 கோடியிலா
அல்லது சாதியோடா? என்று விம்முகிறாள் அவள். என்ன உறவுகள்
இது.
பிள்ளைகளைப்
படிக்க வைத்து வெளிநாடு அனுப்பிவிட்டு வாழ்க்கையில் வெற்றிபெற்று விட்டோம், வாழ்ந்து
காட்டி விட்டோம், 10 கோடி ரூபாய் பங்கிற்காகச் சண்டை போடாது
யாரிடமும் எந்த தயவும் இன்றி பிள்ளைகளைக் கரை ஏற்றிவிட்டோம் எனப் பெருமையோடும் சில
நேரங்களில் ஏக்கத்தோடும் தொலைபேசி அருகில் இருக்கிறாள் அவள்.
வாழ்க்கை
இயல்பாகவே நியாயமற்றது என எழுதுகிறான் றியாஸ் குரானா.
முத்தையா
பிள்ளையின் டீக்கடை. ஊரிலே மிக பெரிய டீக்கடை. மூன்று தலைமுறைகள் கண்ட கடை அது.
சாலை ஆக்கிரமிப்பு காரணம் காட்டி இடிக்கப் பட்டு வெறும் கற்குவியலாகக் கிடக்கிறது, முத்தையா
பிள்ளை ரீகல் கஃபேயில் சர்வராக இருக்கிறார். தம்பிக்கு ஸ்பெஷல் தோசை ஒன்னு எனச்
சொல்லி எடுத்துவருகிறார், கட்டி சட்னி வைத்து, சூடாக
சாம்பார் ஊற்றுகிறார்.
நண்பன்:
I HAVE COMMUNICATED U
REGARDING MY SON’s HEALTH PROBLEM BUT U DIDN'T EVEN SEND A MAIL REGARDING THAT.
I REALY GET DISAPPOINTED WITH U. I have lost my son, he is
dead. do you know? இன்னும் ஏன் அப்படியே இருக்கிறாய், உனது இதயம் என்ன கல்லா?
நான்: sorry dear, I will call u ,
tell u r ph no
நண்பன்:
NOT NECESSARY.
நான்:
இதற்க்கு மன்னிப்பு எனும் ஒரு சொல்லில் முடித்துவிட முடியாது, ஏதோ விளைவின்
முழு பொருள் தெரியாமல் புரியாமல் உனது மெயிலுக்கு பதில் சொல்லாது விட்டுவிட்டேன். முற்றிலும் எனது தவறுதான்.
மற்றவர்களின்
துயரில் பங்கு கொள்ளும் பாசாங்கு எனக்கு தெரியவில்லை நண்பா. சொற்கள் வலியை ஆற்றும்
எனும் உண்மை தெரியாது இன்று வரை இருக்கிறேன், மற்றவர்கள் வலியை ஆற்றக்கூடிய சொற்கள் என்னிடம் இல்லை, அப்படியே அதை சொல்லும் போது அது பொய் என்றே மனதில் தோன்றுகிறது. மவுனமும்
சில நேரங்களின் வலியை ஆற்றும்.
உன்னோடு
வார்த்தைப் பரிமாற்றம் செய்திருக்கலாம்;–அது உன்னை ஆற்றியிருக்கும், ஆனால் அந்த அளவுக்கு
பாசமும் அன்பும் இல்லாத கல் மனதோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என்ன செய்ய,
இறைவன் படைப்பில் இப்படியும் ஒரு பிறவி. இழப்புகளை ஈடு கெட்ட
என்னிடம் இருப்பது பாசமோ, வார்த்தைகளோ நேசமோ இல்லை, என்னிடம் இருப்பது நான் மட்டும்தான்.
நண்பன்:
எந்த இழப்பையும் ஈடுகட்ட முடியும் மரணம் ஒன்றைத் தவிர .... சோகத்திலே பெரிய சோகம் புத்திர சோகம் என்பது தசரதனுக்குத் தெரிந்தது அவன் வழியில் அதை பட்டறியும்
என்க்குப் புரிகிறது. மன்னிப்புகேட்க நீ யார் மன்னிக்க நான் யார்?...... என்ன
உறவு நமக்குள்.....காலப் புயல் புரட்டிப் போட்டு புழுதியாய் என்னை பறக்கவிட்ட
பின்பும்.... உள்ளுக்குள் ஈரம் இருக்குமெனப் பல கற்களைத் தேடித் தோற்ற எனக்கு ஒரே
ஆச்சரியம் ஈரமே இல்லாத உன் இதயத்தில் ”நான்” விதை மட்டும் எப்படி இவ்வளவு ஆழமாக வேர் ஊன்றி மரமாக வளர்ந்தது என்று.....
உன் ”நான்” அழிந்து ”நாம்“ பிறக்கட்டும்.
நான்:
ஈரம் இல்லையெனச் சொல்லாதே நண்பா - அன்பை வெளிக்காட்டிக் கொள்ளும் பக்குவம் இல்லை
எனக் கொள்ளலாம். எனக்கும் ஒரு குழந்தை பிறந்து அது மருத்துவமனையில் 55 நாட்கள்
கழித்து இறந்து போனது உனக்கு தெரியுமா?
நண்பன்:
நண்பா.... பாய்ந்து வரும் அம்பைக் கொண்டே எய்தவனைப் பதம் பார்க்கும் மாய வித்தை கற்றவன் நீ என்பது நானறிந்தது தானே. பத்து ஆண்டுகள் வரை பேசி பழகி உண்டு உறங்கி உயிராய் உணர்வாய்
வாழ்ந்த மகனும் சில நாட்கள் மருத்துவமனையில் இருந்து மறித்த சிசுவும். ஒன்றோ? எனச் சொல்லத்
தோன்றினாலும் நான் நீ அல்லவே? எனவே, கல்லெறிவதை
விடுத்து காயத்துக்கு மருந்திடுவோம் வா.... நண்பா..... குறைந்த பட்சம்
மருந்தில்லாவிட்டாலும் ஒழுகும் ரத்தத்தை தடுக்க வெறும் பஞ்சாவது உன்னிடம்
கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதோ வந்துவிட்டது......
நான்:
யாருக்கும் யாரிடமும் பஞ்சு இல்லை என்பதை அனுபவத்தில் தெரிந்துகொண்டதால், யாரிடமும் நான்
தேடுவதில்லை, ஒரு வகையில் பார்த்தால் அப்படி ஏதும் எந்த
உலகிலும் இல்லவே இல்லை. எப்படி இதற்கு முன் மகிழ்ச்சி இருப்பதாக இருந்தோமோ
அப்படியே மகிழ்ச்சியாக இல்லாத மாதிரி இருக்கிறோம். முடிந்தால் மாற்றலாம். அப்படி மாறுவது ஒன்றும் கொடூர மனதின் செயல் அல்ல. என்னிடம் இருக்கும் ”நானை” எடுத்துக்கொள். உனக்கான பஞ்சு என எதையாவது ஒன்றை எடுத்து தரலாம் ஆனால் அது
உன்னை ஆற்றாது இன்னும் வேதனையைக் கூட்டும். ஆற்றுகிற மருந்து மற்றவனிடம்
எதிர்பார்க்காதே அது பொய் வெறும் பொய். மற்றவன் உனக்கு மருந்து போடுவது உனக்காக
அல்ல, அது அவனுக்காக, அவனின் குற்ற
உணர்விற்க்காக. எனக்கு குற்ற உணர்வு இல்லை. உனக்கான பஞ்சு உன்னிடம்தான் உண்டு. அது
உனது ” நான்”.
நண்பன்: bye.
உனது அகங்காரம் ஒழிந்து போவது எப்பொழுது, நேசங்களையும்,
பாசங்களையும் நீ புரிந்துக் கொள்ள போவது எப்பொழுது?
நான்: பாசாங்குகளும் போலி துடைப்புகளும் தேவையில்லை. வெறும் ஆறுதல் வார்த்தைகள் என்னிடம் இல்லையே
என நினைக்கும் பொழுது என் மீதே எனக்கு வெறுப்பாக கூட இருக்குகிறது. நாம் மற்றவர்
மீது கொள்ளும் பாசமெல்லாம் நமக்காக மட்டுமே. சுத்த சுய நலம். உனது சோகத்தை
கிழித்தெறிய இந்த கல் மனதுதான் வேண்டும். ஏங்கி ஏங்கி விக்கியது போதும். வாழ்க்கை
இயல்பாகவே நியாயமற்றது நண்பா. உனக்கு இப்போழுது தேவை எனது வார்த்தைகள் அல்ல வார்த்தைகளை உதிர்க்காத எனது மனது. ஒருவனை கொல்லும் விஷ கிரிமிகள் இன்னோருவனின் இருப்புக்கு காரணமாக இருக்கிறது என்பதை நீ அறிவாயா?
நண்பன்:
சுய நல வாதி நீ.
அன்றோடு
முடிந்தது அந்த நட்பு.
தனது
முறைக்காக காத்திருக்கிறது வெள்ளை நிறக் கோழிகள் கூண்டுக்குள். பிஸ்மில்லா ஹிர்
ரஹ்மான் இர் ரஹீம். இதோ எனது உடல், இதோ எனது
இரத்தம்,முழங்கால் படிந்து தலை வணங்கி பிள்ளைகளை நினைத்துக்
கொள்கிறாள் அவள்.
இவனின்
மற்றோரு நண்பன் ஒருவன் தீராத வேதனையோடு வேலைக்கு சென்று வந்து கொண்டிருக்கிறான், உட்கார்ந்தாலும்
நின்றாலும் நடந்தாலும் நிமிர்ந்தாலும் படுத்தாலும் முதுகு வலியின் வதை தாளாமல்
பிதற்றுகிறான். உச்சிக்குச் சென்று மின்னலாகக் கால் வரை வந்து உடலெங்கும் பரவும்
இந்த வதையை வைத்துக் கொண்டு வேலை செய்ய முடியவில்லை அப்பா, அம்மா,
தங்கச்சி, அக்கா, அருமை
மனைவி என கதறுகிறான். எனது உடலின் இந்த கதறலைக் கேட்போர் யாரும் இல்லையா, எனத் தூக்குக் கயிற்றுக்குள் தலையை விட்டு நாற்காலியை எட்டி உதைக்கிறான்- Fuck
You All என.
கதை எழுத முயன்ற
பொழுது வந்த எனது நினைவுக் குறிப்புகள் நிகழ்
காலமாக கதைக்குள் வந்துவிட்டது. சுயமாக புதினம் படைக்க முடியவில்லை மை டியர் , அம்முயற்சியில்
எனது சுயமே புதினமாகிவிட்டதை பொறுத்துக் கொள், மை டியர்.
ஒருவேளை சுயநல கதை என்பதால் கூட இருக்கலாம், அங்கும் இங்கும்
சிதறிக் கிடக்கும் வாரத்தைகளுக்குள் என்னைத் தேடினால் கண்டிப்பாக கிடைக்கவே
மாட்டேன். ஏதாவது கதை கிடைத்தாலும் கிடைக்கலாம். இந்த குறிப்புகளை கதைகளாக ஆக்கிக்
கொள்வாயா, மை டியர். அதற்க்குள் உன் சுயத்தையும் சேரத்துப்
படித்துக் கொள்வாய்தானே?
எழுதி
பிழை திருத்தி, மழலைகள்
தூங்கக் கதை சொல்லி, புணர்ந்து எழுந்து, சிகரெட் புகைத்து, ரெமி மார்டினின் இரண்டு குவளை
அருந்திய மெல்லிய போதையில் புன்னகை சிந்திய உதடுகளோடு Send பொத்தானை
அமுக்குகிறான் இவன்.