ஆன்லைனில் புத்தகம் வாங்க

Saturday, 7 December 2013

போட்டிச் சிறுகதை-11

சிறுகதை-உலகாந்திரி

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயத்தின் மீது பைத்தியம். சாப்பாடு, சினிமா, நாள் பூரா செய்தி பார்த்துக் கொண்டே இருப்பது, கிரிக்கெட், முக்கியமாக இன்டர்நெட், இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் பைத்தியத்தின் வகைகளை. இதில், என் ராகுல் ஒரு டூர் பைத்தியம். கல்யாணம்
ஆகி ஐந்து வருடம் ஆகியும் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை. ஆனால் சதா உலகத்தைச் சுற்றிக் கொண்டேயிருக்கிறோம். நாங்கள் போகாத மூலைமுடுக்கே இல்லை. நேஷனல் ஜியோகிராஃபிக் இணையதளத்தில் வரும் டாப் 10 எக்ஸாடிக் லொக்கேஷனுக்கெல்லாம் தேடிபிடித்து சென்றிருக்கிறோம். எல்லாரும் டூர் போன ஆல்பம் என்று நான்கைந்து அதிகமாக போனால் பத்து வைத்திருப்பீர்களா? நாங்கள் டூர் போன ஆல்பம் இருபது டிவிடியில் வைத்து இருக்கிறோம். ஒரு டிவிடியில் சராசரியாக இரண்டாயிரம் போட்டோ என்றால் கணக்கு போட்டுக் கொள்ளுங்கள்.

வாழ்க்கையில் உன் லட்சியம் என்னன்னு தெரியாத்தனமாக ஒருவாட்டி கேட்டேன்.

"ஒன் மில்லியன் டாலர் சேக்கணும்....அப்புறம் அப்படியே உலகத்த சுத்திகிட்டே இருக்கணும்"....

லோன் போட்டெல்லாம் டூர் போவான். ராகுலுக்கு எப்படி இந்த டூர் பைத்தியம் ஆரம்பித்தது என்று எனக்குத் தெரியாது. ஒருவேளை அமெரிக்கவாசத்தால் இருக்கலாம். அவனுடைய க்ளோஸ் கசின் பிரதர் கல்யாணத்துக்குக் கூட போகாம ஊரைச் சுற்றியிருக்கேன் என்று சொல்லுவான். அவன் ஒரு தேசாந்திரி மாதிரி உலகாந்திரி. மூவுலகிலும் பயணிப்பவன். ராகுலுக்கு டூர் என்று சொன்னால் போதும். கண்களை அகல விரித்துக் கொண்டு எந்த இடம், எங்க இருக்கு என்று மூன்று நாள் கூகுளே சரணாகதியாகக் கிடப்பான். சோறு தண்ணி, வேலை வெட்டி எதுவும் கண்டு கொள்ள மாட்டான். உடம்பை வருத்தி, போகக் கூடிய இடம் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டு ஒரு வேர்ட் டாக்குமெண்ட் தயார் செய்து, பிரிண்ட் அவுட் எடுத்து, ஸ்டேப்ளர் பின் போட்டு விடுவான்.

"இங்க பாரு வித்யா...." என்று அந்த பிரிண்ட் அவுட்டை விசிறிக் கொண்டே ஒரு அசட்டு சிரிப்பு சிரிப்பான்.

"இந்த வாட்டி எங்க பா!"

"டெத் வாலி"

"அது பேரு கேக்கவே பயமா இருக்கு ராகுல்....கடந்து அலையாத...."

"கண்ணு, எஃப்.ஒய்., நான் இந்த எடத்துக்கு பேச்சுலரா இருக்கறப்போவே போயிருக்கேன்....டெரிஃபிக்கா இருக்கும்....நீ பாக்க வேண்டிய எடம்..."

"ஆள விடு சாமி...நீ வேண்ணா போய்ட்டு வா...ஏம்பா போன மாசம் தான் சௌத் அமெரிக்கால ஏதோ காட்டுக்குக் கூட்டிகிட்டு போன...."

"சீ....நீ இங்க வந்து பாத்தே ஆகணும்...பயந்தாகொள்ளி பாக்குவெட்டி..."

செவ்வாய் கிரகத்திற்கு 2030கிட்ட நாங்கள் கூட்டிக்கொண்டு போகிறோம் என்று ஒருமுறை ஐரோப்பாவிலிருந்து விளம்பரம் வந்தது. அதற்கு தன் பெயரைக் கொடுக்க போகிறேன் என்று என்னை ப்ளாக்மெயில் செய்கிறான். நாளுக்கு நாள் இவனுடைய டூர் பைத்தியம் அதிகரித்துக் கொண்டே போனது. ஆனால் இப்படி முற்றும் என்று நான் நினைத்து பார்க்கவில்லை. நான் பீம்சென் ஜோஷியின் பரம வெறியன். அவரின் காந்தர்வ குரலுக்காக ஒரு சில பாடல்களை தொடர்ந்து 500 தடவை கேட்டு இருக்கிறேன். அதை சொன்னவுடன் என்னை அநியாயத்திற்கு ஓட்டுவான் ராகுல்.

"வித்யா, ஒன்ன சைக்கியாடிர்ஸ்ட்ட கூட்டிகிட்டு போகலாம்னு நினைக்கிறேன். இந்த மாதிரி அப்ஸஸ்டா இருக்கறதுக்கு" என்று மிரட்டுவான்.

நாங்கள் ஒன்றும் இணைபிரியாத ஆத்மார்த்த ஜோடி எல்லாம் கிடையாது. அவனுக்கு பிடிக்காததை செய்ய எனக்கு ஆசையாக இருக்கும். அதே போல் எனக்கு பிடித்ததை அவன் என்ன தடுத்தாலும் செய்து முடிப்பேன். இந்த பயணம் செல்வது எனக்கு ரொம்பவே வெறுத்து போய்விட்டது. என்னுடைய வெறுப்பை புரிந்து கொண்ட அவன் வேண்டுமென்றே அண்மைகாலமாக அதிகம் ஊர் சுற்றுகிறான். அது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதற்கு முடிவு கட்ட என்ன செய்வது என்று குழப்பிக் கொண்டிருந்தேன்.

"அது எப்படிப்பட்ட எடம்..."

"அப்படி வாடீ என் பன்னிக்குட்டி..." இது ராகுல் சொல்லும் வழக்கமான வசனம்.

நான் அமைதி காக்க, ராகுலே தொடர்ந்தான்.

"காலிஃபோர்னியா ஸ்டேட்ல லாஸ் வேகஸ்லேந்து மூணு மந்நேரம் கார்ல ட்ரைவ்....செம்ம த்ரிலிங்கா இருக்கும்டீ....எல்லாரும் லாஸ்வேகஸ், க்ராண்ட் கேன்யன் போய்ட்டு ஜென்ரலா ரிடன் ஆய்டுவாங்க....இந்த எடம் பாக்க வேண்டிய எடம்....செம்ம எக்ஸாடிக்...நீ வேண்ணா கூகிள், விக்கிபீடியால போட்டு பாரு...."

"அதான் நீ பிரிண்ட் அவுட் எடுத்து வச்சுருக்கியே...அப்புறம் என்னத்துக்கு நான் வேற பார்த்துகிட்டு...ஆனா அது என்ன டெத் வாலின்னு பேரு வச்சுருக்காங்க...."

"அதி பயங்கர டெஸர்ட்....பாலைவனம்....குட்டி ரோடு இருக்கும்.....ஆனா நீளமான ரோடு....வளஞ்சு வளஞ்சு...உப்பளம் இருக்கும்.....அத்துவானமோ அத்துவானம்..."

"வாட் அத்துவானமா? அப்படின்னா?"

"சுத்தீ வர அம்பது மைலுக்கு ஒரு பய இருக்க மாட்டான்...செம்ம குஜால்ஸா இருக்கும்..."

ராகுல் டூர் என்று சொன்னால் போதும் பயங்கர எந்த்து பட்டானி ஆகிவிடுவான். என்னைவிட அவனுக்கு டூர் மேல் தான் மோகம். டூர் போய் கொண்டே இருப்பதால் எங்களிடம் சேமிப்பென்பது சல்லிக்காசு கூட இல்லை. ராகுலுக்கு 34 நடக்கிறது, எனக்கு 30. இதுவரை சொந்தவீடு என்று எதுவும் வாங்கவில்லை. ஊரிலிருக்கும் பெரிசுகள் எல்லாம் எங்களுக்கு குழந்தை இல்லாததை குத்தி காண்பிக்கிறார்கள். அதைப்பற்றி அவனிடம் எவ்வளவோ முறை எடுத்து சொல்லியிருக்கிறேன்.

"ஹே ராகுல்....ஏதோ ஒரு வருஷம் ரெண்டு வருஷம்னா ஓகே....ஊர்ல எல்லாரும் என்னதான் தப்பா பேசறாங்க...புரிஞ்சுக்கோ..."

"பாத்துக்கலாம்...எங்க போய்ட போகுது....ஸீ, ஒனக்கு எத்தனவாட்டி சொல்றது....நாளப்பின்ன கொழந்த குட்டியெல்லாம் வந்ததுன்னா, அப்புறம் டூர் எல்லாம் இந்த மாரி போக முடியுமா?"

அவனை இந்த டூர் விஷயத்தில் மட்டும் என்னால் சமாதானமே படுத்த முடியாது. வேறு வழியில்லாமல் ஒத்துக் கொண்டேன். ஃபிளைட் பிடித்து லாஸ் வேகஸ் சென்று, அங்கிருந்து காரில் பயணித்தோம். அங்கு எனக்கு பெரிய ஆச்சர்யம் காத்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை. மதியம் 3மணிக்கு அந்த மலைகளினூடே நீண்ட, மிக நீண்ட சாலையில் பயணித்தோம். சிறு சிறு மலைகள் ஆங்காங்கே வந்து கொண்டிருந்தன. சிறிது நேரம் சென்றபிறகு மலைகள் மறைந்துவிட்டன. ஆள் நடமாட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. பொட்டல் பாலைவனம். வெயில் கடுமையாக இருந்தது. இரவில் உள்ளே ஏதாவது ஹோட்டல் இருக்கும், அங்கே தங்க போகிறோம் என்று நினைத்துவந்தேன். இளையராஜா பாடல்கள், ஒரு புதுவிதமான உலகம் இதில் மனம் லயித்தக் காரணத்தால் புற உலகில் நடப்பது என்ன என்று எனக்கு விளங்கவில்லை.

"கண்ணு, ஒனக்கு ஒண்ணு தெரியுமா?"

"ம்ம்ம்..."

"ச்.....ஒனக்கு ஒண்ணு தெரியுமான்னு கேட்டேன்"

"என்ன...சொல்லு"

"நாம இப்போ எங்க போறோம்னு தெரியுமா?"

"தெரியாது....ஆனா கெஸ் பண்ண முடியும்..."

என்னை ஆச்சர்யத்துடன் பார்த்தான்.

"உள்ள இருக்கற ஹோட்டலுக்கு போறோம். நைட் அங்க தங்க போறோம்...கரெக்டா?" என்று பெருமிதத்துடன் கேட்டேன்.

"செம்ம காமெடி....இந்த பொட்டல் பாலவனத்துல ஹோட்டலா? சுத்திமுத்தி கொஞ்சம் பாரேன்....அதோ அந்த கோடில தொடுவானம் தெரியுதுல்ல அது இங்க இருந்து எத்தன மைல் இருக்கும்னு கெஸ் பண்ண முடியுமா?"

"ரெண்டு மூணு மைல் இருக்குமா?"

"சரியான கொழந்தடீ நீ....அது இங்க இருந்து கொறஞ்சது 40மைல் அதாவது ஒரு 60-70 கி.மீ இருக்கும்...." என்று என் முன்மண்டையில் ஒரு கொட்டு வைத்து சொன்னான்.

இலக்கற்ற பயணம்! அவன் அப்படி சொன்னவுடன் ஆடிப்போனேன். என்னால் நம்ப முடியவில்லை. அடிவயிற்றை என்னமோ செய்தது. இவன் சொல்வதைப் பார்த்தால் இன்றிரவு இந்த பாலைவனத்திலேயே சுத்திக் கொண்டு இருக்க போகிறோம் என்று தோன்றியது. இந்த மாதிரி அனுபவம் எனக்கு வாழ்க்கையில் கிடைத்தது இல்லை. பக்கத்தில் ராகுல் இருக்கிறான் என்ற தைரியம் இருந்தபோதிலும் எங்கே சாப்பிடுவது, தூங்குவது என்ற சந்தேகம் என்னை வாட்டி எடுத்தது. இவனிடம் போகாதே என்று சொன்னாலும் கேட்கப்போவதில்லை.

ராகுலே தொடர்ந்தான்.

"இங்க பாரு....நாம தொலஞ்சு போயிட்டோம்"

"வாட்?"

"நாம காணாம போயிட்டோம்...." என்று அழுத்தி கூறினான்.

உடனே என் செல்போனை எடுத்து கூகிள் மேப்ஸ் போய் பார்க்கலாம் என்று சுறுசுறுப்பானேன்.

"ஏண்டீ, ஒனக்கு மண்டேலே ஏதாவது இருக்கா? ஒங்க ஆபீஸ் அண்டர்கவுண்ட் பார்க்கிங்லயே சிக்னல் எடுக்காது....இந்த காட்டுல ஒனக்கு சிக்னல் கெடைக்கப்போகுதா?"

எனக்கு வாந்தி வந்தது. இவனை மாதிரி ஒரு பைத்தியத்துக்கு போய் வாக்கப்பட்டமோ என்று வருத்தப்பட்டேன். இந்த மாதிரி சைக்கோ ஆசாமிகளை சினிமாவில் பார்த்திருக்கிறோம். இவன் இப்படி செய்வான் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஓங்கி ஒரு அறைவிட்டு "வண்டியத் திருப்புடா கழுதன்னு" சொல்லலாம் என்று தோன்றியது.

"மொபைல், ஜீபிஎஸ் எதுலயும் சிக்னல் இருக்காது....செம்ம த்ரிலிங்கா இருக்கா?"

அன்றிரவு. வண்டியை நிறுத்தி கார் ட்ரங்கிலிருந்து கூடாரம் போட ஒரு ஷாமியான துணி, இரண்டு மூன்று கம்புகள் என்று வெளியே எடுத்தான் ராகுல். நான் இரவு சாப்பாடிற்காக பிரட், ஜாம் எல்லாவற்றையும் தயார் செய்தேன். எங்கும் கும்மிருட்டு. நிசப்தம். கேட்க நாதியில்லாத இடம். ஆயினும் அந்த கருத்த வானம், அதில் பல்லிளிக்கும் நட்சத்திரங்கள் இவற்றை எல்லாம் ஆசை பொங்க ஒரு நாளாவது மொட்டைமாடியில் உட்கார்ந்து ரசித்திருக்கிறோமா? அம்மாடியோவ், என்ன அழகு. இந்த பூமி ஓர் உலகம் என்றால், அந்த பாலைவனம் இரண்டாம் உலகம். என்னுள் அவன், அவனுள் நான் என அவ்விரு உலகிலிருந்தும் தொலைந்து மூன்றாம் உலகினில் திக்குத் தெரியாமல் பயணித்தோம். அது எங்கள் கூட்டுக் களியினிலே கவலை வெடித்துச் சிதறிய ஓர் இரவு!

விடியற்காலை மூன்று மணிக்கெல்லாம் காணாமல் போன இருவரும் மீண்டும் பயணித்து பூமிக்கு வந்தடைந்தோம். என் மனது குடைந்தது. சட்டென்று காரைக் கிளப்பி கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம். தூரத்தில் வானத்திற்கு கீழே பூமி மெல்ல நகர்ந்து, மலைகளினூடே மேலெழும்பியது. அதன் பாதத்தில் புல்வெளிகளும், ஆள் நடமாட்டமும் தென்பட்டது.

என்னை பரிதவிக்க விட்டதில் ராகுலுக்கு ஓர் ஆனந்தம்.


ராகுலுக்கு அது கடைசி பயணமாக இருக்கும் என்று எனக்கு கண்கூடாகத் தெரிந்தது.