ஆன்லைனில் புத்தகம் வாங்க

Wednesday, 4 December 2013

போட்டிச் சிறுகதை-9

சிறுகதை-அந்த சில நொடிகள் 

விழிப்பு வந்ததும் "இன்னிக்கு என்ன நாள்?" என யோசித்தான் சுரேஷ். " வெள்ளி கிழமை..! அப்பாடா.. இன்னிக்கு ஒரு நாள் ஆபிஸ் போனா ரெண்டு நாள் லீவ்" என்கிற நினைவே உற்சாகம் தந்தது.

அருகில் மகள் ஸ்வேதா தலையணையை கட்டி அணைத்த படி தூங்கி கொண்டிருந்தாள். நேற்று அவள் சொன்னது நினைவுக்கு வந்தது.

" அப்பா "

"ம்ம்"

" என் கிளாசில ஒரு பையன் இருக்கான். ஷாலோம்னு பேரு. அவன்.. அவன்"

"ம் சொல்லு "

" அவன் என்னை லவ் பண்றானாம்பா "

ஒன்றாம் வகுப்பு படிக்கும் பெண் சொல்வதை பார்த்து சிரிப்பு வந்து விட்டது

" அப்புடியா? உனக்கு எப்படிம்மா  தெரியும் ?"

" மணி இருக்கான் இல்லை. அவன்தான் வந்து சொன்னான். ஷாலோம் உன்னை லவ் பண்றானாம். சொல்ல சொன்னான் அப்படின்னு. "

" நீ என்னம்மா சொன்னே?"

"அப்படி எல்லாம் சொல்ல கூடாது. பெரியவங்க ஆனப்புறம் தான் அதெல்லாம் செய்யனும்னு சொன்னேன். இன்னொரு தடவை சொன்னா மிஸ் கிட்டே சொல்லிடுவேன்னு போய் சொல்லுடான்னு சொன்னேன்"

சற்றே மிரண்ட படி சொன்ன ஸ்வேதாவை கட்டி அணைத்து கொண்டான். " சமத்து. சரியா சொன்னேம்மா"

இரவு மகள் உறங்கிய பின் மனைவியிடம் கேட்டான் " யார் இந்த ஷாலோம். உனக்கு தெரியுமா?"

" எனக்கெங்கே தெரியும் ? நீங்க தான் காலையில் கொண்டு போய் விடுறீங்க"

" இல்லை. பயல் நம்மளை விட சுறுசுறுப்பா இருக்கான். நான்  ஏழாவது  படிக்கும் போது தான் காதல் வேலையெல்லாம் ஆரம்பிச்சேன். இவன் ஒண்ணாவதிலேயே ஆரம்பிச்சுட்டானே "

"க்கும். பொண்ணு கிட்டே ஒருத்தன் லவ் பண்றேன்னு சொல்லிருக்கான். ரசிச்சிக்கிட்டு கிடக்குறீங்க "

"சாயங்காலம் ஆட்டோவில கூட வர்ற பையனா இருப்பானோ? வண்டி ஓட்ட கத்துக்கிட்டேன்னா நீயே போய் சாயங்காலம் கூட்டி வந்துடலாம். ஆட்டோ செலவாவது மிச்சம் "

"ஆமா. இந்த வயசுக்கு மேலே நான் வண்டி ஓட்ட எங்கே கத்துக்கிறது. "

" எல்லாத்துக்கும் என்னையே depend பண்ணியிருக்கே. ஒரு ATM-ல் போய் பணம் எடுன்னா மாட்டேங்குறே "

" நீங்க என்னை சாப்பாட்டுக்கு depend பண்ணி இருக்குறீங்க இல்லை. அப்படி தான்"

"அதுக்கில்லைம்மா. நான் ஒரு மாசம் ஊருக்கு போறேன்னு வையி. நீயே சமாளிக்க வேணாம்"

"நீங்க எங்கே போக போறீங்க?உங்களுக்கு தான் டூரிங் ஜாப் கிடையாதே?"

"வெளி வேலை தெரிஞ்சிக்கணும்னு ஆசையே இல்லையா"

"இல்லை. அதுக்கு தான் எங்கப்பா உங்களை பிடிச்சு கல்யாணம் பண்ணி வச்சிருக்கார்"

பேச்சு வழக்கமான இடத்துக்கு வந்து விட்டது. இனி பேசுவது வீண் சண்டையில் சென்று முடியும்.

சுரேஷ் எழுந்தான். ஸ்வேதாவையும் எழுப்பினான் "செல்லம் ; எழுந்திரு. ஸ்கூலுக்கு லேட் ஆச்சு பாரு"

ஸ்வேதாவை எழுப்பி. குளிக்க வைத்து உணவு தருவது மட்டுமே காலையில் அவன் வேலை

அடுத்த ஒரு மணியில் இருவரும் கிளம்பி விட்டனர். வெளியில் வந்து பைக்கை எடுக்கும் போது வலது பக்க ரியர் வியூ கண்ணாடியை கவனித்தான். அலுவலகத்தில் ஒரு நாள் யாரோ பக்கத்து வண்டி காரன் வண்டியை வச்சு இடிச்சு திருகி விட்டுட்டான். அதிலிருந்து பின் பக்கம் வரும் வண்டிகள் கண்ணாடியில் தெரிவதே இல்லை. சரி பண்ணனும் சரி பண்ணனும் என நினைப்பு. "அதுக்கு வேற பத்து ரூபா கேப்பான். அடுத்த வாரம் செர்வீசுக்கு விடும் போது கண்ணடியை சரி செஞ்சிக்கணும் "

நினைத்த படியே வண்டியை எடுத்தான்

ஸ்வேதாவை பள்ளியில் விட்டு விட்டு அலுவலகம் சென்றான். வேலையில் பின் அனைத்தும் மறந்து போனான்.

அலுவலகம் விட்டு வெளியே வந்து போது ஏழரை மணி. "சனி ஞாயிறு ...ஸ்நாக்ஸ் வாங்கணும்"

ஸ்நாக்ஸ் வாங்கி கொண்டு வீட்டை நோக்கி விரையும் போது உற்சாகம் கரை புரண்டது. " மடை திறந்து தாவும் நதி அலை நான் " பாடியவாறே பைக்கை ஓட்டினான்

குழந்தை ஸ்வேதா நினைவு வந்தது " செல்லம் புஜ்ஜி." மனதுக்குள் கொஞ்சினான். சாயங்காலம் வண்டி ஓட்டி கொண்டு வீட்டுக்கு போகும் போது தான் குழந்தையை கொஞ்சம் ஆசை அதிகமாக வருகிறது. "சீக்கிரம் போய் பார்க்கணும். பட்டு மாதிரி மெத்து மெத்துன்னு இருப்பா".

வேலை பளுவிலும் தினசரி துயரிலும்,  மகிழ்விக்கும் ஒரே விஷயம் நம் குழந்தையின் புன்னகையும் ஸ்பரிசமும் தானே !

நூறடி ரோடு வந்து விட்டான்.புதிதாக போடப்பட்ட சாலை. எந்த சிக்னலும் இல்லை. குறைவான வாகனங்கள் விரைவாக செல்லும் சாலை . வலது பக்கம் திரும்பி கொஞ்ச தூரம் சென்றால் வீடு. 

வலது பக்க கண்ணாடியில் பின் புறம் வண்டிகள் வருதா என பார்த்தான். கண்ணாடி எதோ ஒரு புறம் திரும்பியபடி இருக்க, ஏதும் தெரியவில்லை. கண்ணாடியை மெக்கானிக்கிடம் காட்டி சரி செய்திருக்கலாம்; அவனாவது முகத்தை திருப்பி பார்த்திருக்கலாம். சில நொடிகள்.. சில நொடிகள்....!!!வலப்புறம் வண்டியை திருப்பி அவசரமாக தன் தெருவிற்குள் நுழைய எத்தனித்தான்.

அப்போது தான்... அப்போது தான்..

பேய்த்தனமாக பின்னாலிருந்து வந்த அந்த தண்ணீர் லாரி அவனையும் பைக்கையும் அடித்து கடாசி விட்டு நிற்காமல் விரைந்தது .


ஸ்வேதா....ஆ ..ஆ ..ஆ............என்ற குரல் காற்றில் கரைந்தது.