ஆன்லைனில் புத்தகம் வாங்க

Monday 23 December 2013

போட்டிச் சிறுகதை-37

சிறுகதை-சைட்டு


முப்பது வயசாச்சு. ஒரு கல்யாணம் பண்ண வழியக் காணோம். என்ன சைட்டு வேண்டிக் கிடக்கு? தன்னைத் தானே கேட்டுக் கொண்டான். மறு கணமே மனதின் மன்மதப் பகுதி வெகுண்டெழுந்து கேள்வி கேட்ட தர்க்கப் பகுதியை அறைந்து சாத்தி விட்டது.

மீண்டும் மூச்சு வாங்கியபடியே வியர்த்து விறுவிறுத்தபடி அவளைப் பார்க்க ஆரம்பித்தான்.

இப்ப நம் ஹீரோவின் முன் கதை .

தினமும் அலுவலகம் விட்டு வரும் போது வண்டியை தவறாமல் ஏதாவது பஜ்ஜி போண்டா கடையில் நிறுத்தி, நன்றாக மொக்கி விட்டு வீட்டுக்குப் போனது, அப்புறம் கம்பெனி மாறி ஊருக்கு வெளியே வேலை கிடைத்ததும், கேன்டீனிலேயே தினமும் சீஸ் சாண்ட்விச்சும் பப்ஸும் சன்னா சமோசாவும் தின்றது, இதெல்லாவறுக்கும் மேல், பாவம் அம்மா மனசு கஷ்டப் படக் கூடாதே என்று, வெளியில் எவ்வளவு தின்றாலும், வீட்டிலும் போய் ஒரு ரவுண்டு கட்டியது, இதெல்லாம் சேர்ந்து, எடையை எக்குத் தப்பாக எகிற வைத்தது அவனுக்கு. மத்தியப் பிரதேசத்தின் எல்லை விரிவடைந்து கொண்டே போனது.

விளைவாக, எந்த பிரெண்டைப்  பார்க்கப் போனாலும் மூஞ்சியைப் பார்க்காமல், தோளிலும் கை போடாமல், தொப்பையைப் பார்த்தே பேசத் தொடங்கினார்கள். இதனால் எங்கே போனாலும், குறிப்பாக பெண்கள் இருக்குமிடம் போனால் இந்த சனியன் பிடித்த தொப்பையை பகீரதப் பிரயத்தனம் பண்ணி உள்ளே இழுத்துக் கொள்ள வேண்டியிருந்த்து.

வெறுத்துப் போய் , இதை என்னமாவது வழி பண்ண வேண்டும் என்று ரெண்டு வருஷமாக நியூ இயர் தினத்தன்று வீர சபதம் போட்டு, எல்லாரையும் போல் காற்றில் பறக்க விட்டு, ஒரு கட்டத்தில், தொப்பையின் கன பரிமாணங்கள் அபாய அளவைக் கடக்கவே, “முப்பத்தைந்து வயதில் மாரடைப்பு” போன்ற கதைகள் நினைவில் வந்து பயமுறுத்த, அலறிப் பிடித்து ஒரு உயர் ரக ஜிம்மில் போய் சேர்ந்தான்.

தான் ஒழுங்காக தொடர்ந்து ஜிம்முக்குப் போவோம் என்ற நம்பிக்கையெல்லாம் அவனுக்கே கிஞ்சித்தும் இல்லாததால், அந்த ஜிம் காரன் கழுத்தைப் பிடிக்காத குறையாக்க் கேட்டும் மூணு மாசம் மட்டும் தான் பணம் கட்டினான்.

ஆனால் எந்த தெய்வத்தின் கடைக் கண் பார்வை இவன் மேல் பட்டதோ தெரியவில்லை. திடீரென்று இவனுக்கு நல்ல புத்தி வந்து, எடைக் குறைப்பில் மும்மரமாக இறங்கி, ரெகுலராக ஜிம் போகத் தொடங்கி விட்டான். பலன் நன்றாகவே தெரிந்தது. மூன்று மாதங்களில் ஒரு மாதிரியாக தேற்றி, ஐந்து கிலோ எடை குறைந்து விட்டான்.

இந்த முன் கதை எதற்காக இங்கே சொல்லப் படுகிறதென்றால், நம் ஹீரோ இவ்வளவு சுருக்கில் இப்படி எடை குறைக்கக் காரணம் முழு ஈடுபாட்டுடன் கவனம் சிதறாமல் பயிற்சி செய்தது தான் என்பதை நிறுவவே.

அந்த கவனத்தையும் கட்டுப் பாட்டையும் கலைக்க வந்தவள் தான் முதல் பத்தியில் நம் ஹீரோ மூச்சிரைக்கப் பார்த்த பெண். வழக்கமாக ஜிம்மில் ஆன்ட்டி என்று இளைஞர்களால் அழைக்கப் படும் தகுதி படைத்த, எடையை எப்படியாவது குறைத்து கணவன்களை ஆச்சர்யப் படுத்த வேண்டும் என்று உழைக்கும் நடுத்தர வயது நாரீமணிகளை மட்டுமே பார்த்துப் பழகியிருந்த இவனுக்கு, அன்று ஜிம்மில் நுழைந்ததும் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

மிக அழகாக அவள் ட்ரெட் மில்லில் நடந்து கொண்டிருந்தாள். நின்று நிதானமாக அவளை ரசித்தவன், முதலில் அடிப்படை சோதனைகளில் இறங்கினான். முதல் சோதனையாக கழுத்தை பார்த்தான். தாலி இல்லை. மகிழ்ச்சி மீட்டர் ஏறியது. அவள் ஷூவைக் கழட்டும் போது எதார்த்தமாகப் பார்த்தான். அப்பாடா மெட்டியும் இல்லை. கை விரல்களை உற்று உற்றுப் பார்த்தான். தேங்க் காட் !! கல்யாண மோதிரமும் இல்லை. இனிமேல் தாராளமாக இவளை சைட் அடிக்கலாம் என்று குதூகலித்தான்.

சைட் அடிப்பதில் கூட நியாய தர்மங்களைப் பின்பற்றுபவன் நம் ஹீரோ என்று சொன்னால் இந்த உலகம் ஏற்றுக் கொள்ளவா போகிறது? சைட் தொடர்ந்தது. அவள் இவன் காது படவே பெண் ட்ரெயினரிடம் , “ நாளைக்கு நான் வர மாட்டேன். குடும்பத்தோட குருவாயூர் போறோம்” என்று சொன்னதை, இவனுக்கு ஜாடையாக செய்தி சொன்னதாக நினைத்துக் கொண்டு அல்பமாக குதூகலித்தான்.

அவள் வண்டி நம்பரை மனப்பாடம் செய்ய முயன்று , அந்த நம்பரில் X வரும் என்பதற்கு மேல் மனப்பாடம் செய்ய முடியாமல் அதை மட்டும் ஞாபகம் வைத்துக் கொண்டான். அளவெடுத்துச் செய்தது போல் கச்சிதமாக இருக்கிறாளே? இவள் எதற்கு ஜிம்முக்கு வருகிறாள் என்று மனதுக்குள் அதிசயித்தான். என்ன ஒரு குழந்தைத் தனமான முகமும் சிரிப்பும் என்று பூரித்தான்.

அந்தப் பெண்ணும் அவ்வப்போது திரும்பி இவனைப் பார்க்க ஆரம்பித்தாள். இவனுக்குப் புல்லரிக்க ஆரம்பித்தது. முன்னை விட ஆர்வமாக ஜிம் திறக்கும் போதே போய் நிற்க ஆரம்பித்தான். அவள் கிளம்பும் வரை செய்த எக்சர்சைஸையே திரும்பத் திரும்ப செய்து கொண்டு திரிந்தான். ட்ரெயினர்களெல்லாம் இவன் ஈடுபாட்டைக் கண்டு வியந்து மகிழ்ந்தார்கள்.

அப்போது தான் அந்த சரித்திரப் பிரசித்தி பெற்ற சம்பவம் நடந்தது. ட்ரெட் மில்லில் நடந்து கொண்டிருந்த அவள், இவன் போய் பக்கத்து ட்ரெட்மில்லில் ஏறியவுடன், சட்டெனத் திரும்பி இவனைப் பார்த்து புன்னகைத்தாள். அவ்வளவு தான். சந்தோஷத்தில் தலை கால் புரியாமல் ட்ரெட்மில்லில் இவன் ஓடிய ஓட்டத்தில், ட்ரெயினர்கள் ரெண்டு மூன்று பேர் ஓடி வந்து , “சார் கொஞ்சம் மெதுவா ஓடுங்க. மெஷின் ரொம்ப அதிருது” என்று சொல்ல வேண்டியிருந்தது.

உடனே அல்லும் பகலும் இவன் அந்த சிரிப்பு பரிமாற்றத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவது எப்படி என்று சிந்திக்கத் தொடங்கினான். அவளிடம் நேர்படப் பேசுவது தான் ஒரே வழி என்று முடிவுக்கு வந்தவனாக, அடுத்த நாள் காலை கிளம்பினான். முன் காலத்தில் பெண்களிடம் பேச முயற்சி செய்து வாங்கிய பல்புகள் துர் சொப்பனங்களாக வந்து பயமுறுத்தினாலும் அவற்றையெல்லாம் துடைத்தெறிந்து விட்டு வீறு கொண்டு புறப்பட்டான்.

அவளை பார்த்தபடியே ஒர்க் அவுட்டுகளை முடித்தான். அவள் கிளம்பியதும், செய்து கொண்டிருந்த ஒர்க் அவுட்டை பாதியில் போட்டு விட்டு பறக்காவெட்டி மாதிரி அவள் பின்னாலேயே கிளம்பினான்.

வண்டி எடுக்குமிடத்தில் அவசரமாகக் கிளம்பியவளை, பதற்றத்துடன், “எக்ஸ்கியூஸ் மீ” என்று சத்தமாகக் கூப்பிட்டு நிறுத்தி விட்டான். திரும்பிப் பார்த்தாள். என்ன பேசுவது என்று தெரியவில்லை. அபத்தமான மௌனத்தை தன் கேனச் சிரிப்பால் நிரப்பினான். அவளும் சிரித்தாள்.

சட்டென்று சுதாரித்தவன், “ உங்க பேர் என்னன்னு  தெரிஞ்சிக்கலாமா?” என்றான். “ எதுக்கு?” என்றாள் சிரிப்பை நிறுத்தாமல். “ இல்ல.. தினமும் பாக்கறோம். ஸ்மைல் பண்ணிக்கறோம். பேரைத் தெரிஞ்சு வெச்சுக்கலாமில்லையா? அதான் கேட்டேன்.” என்றவன் தன் பெயரை சொல்லி அறிமுகப் படுத்திக் கொண்டான்.

“ஐயாம் சுசித்ரா” என்றாள் சிரிப்பு குறையாமல். கொஞ்சம் தைரியம் வந்திருந்தது. இருந்தாலும் முதல் நாள் இவ்வளவு போதும் என்று முடிவு செய்தவனாக, “ ஓகே சுசித்ரா..நாளைக்கு பார்ப்போம்” என்றான் புன்னகைத்து.

அவளும் புன்னகைத்தவாறே ,” நாளைக்கு நான் வர மாட்டேன். நாளைலேர்ந்து ஒரு டென் டேஸ் வர மாட்டேன்.” என்றாள். சற்றே அதிர்ந்து ஏன் என்பது போல் பார்த்தான்.

“ நாளைலேர்ந்து எனக்கு Half Yearly exams ஆரம்பிக்குது. அதனால வர மாட்டேன்” என்று கூறி ஒரு சின்ன இடைவெளி விட்டவள், இவன் கண்களை நேருக்கு நேராய்ப் பார்த்து, “ ஓகே. நான் கிளம்பறேன். ஸீ யூ லேட்டர் அங்கிள்” என்று புன்னகைத்தவாறு வண்டியை கிளப்பி மறைந்தாள்.


“அங்கிள்...அங்கிள்... அங்கிள்...” இவன் காதுகளில் எதிரொலித்த படியே இருந்தது.